252 ஏரிகள் வறண்ட நிலைக்கு சென்றதால் சாகுபடி நடக்குமா? 1 டி.எம்.சி.,கூட தண்ணீர் இல்லாததால் சிக்கல்
252 ஏரிகள் வறண்ட நிலைக்கு சென்றதால் சாகுபடி நடக்குமா? 1 டி.எம்.சி.,கூட தண்ணீர் இல்லாததால் சிக்கல்
UPDATED : ஆக 11, 2026 07:27 AM
ADDED : ஆக 10, 2026 09:44 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரி பாசனத்தை நம்பி, 1.23 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 381 ஏரிகளில், 252 ஏரிகள் வறட்சி நிலைக்கு சென்றுவிட்டன. ஏரி பாசனத்துக்கு 12 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும் நிலையில், 1 டி.எம்.சி., கூட கைவசம் இல்லாததால் சாகுபடி நடக்குமா என்ற கவலையில் உள்ள விவசாயிகள், வருண பகவான் கைகொடுப்பாரா என, எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தின் அதிக ஏரிகள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில், பட்டு வர்த்தகத்திற்கு அடுத்து பிரதான தொழில் விவசாயம்தான். விவசாயத்திற்கு பெரும்பாலும் ஏரி பாசனத்தை விவசாயிகள் நம்பியுள்ளனர்.
ஆற்று பாசனம், கிணற்று பாசனம், ஆழ்துளை கிணறு ஆகியவை வாயிலாக குறைந்த எண்ணிக்கையிலான நிலங்களே பயன் பெறுகின்றன.
ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் ஏரிகள் மூலம் பயன் பெறுகின்றன. ஏரிகளுக்கு தேவையான தண்ணீர், வடகிழக்கு பருவமழை சமயத்தில் அதிகளவு கிடைக்கிறது.
அப்போது கிடைக்கும் மழைநீரை அனைத்து ஏரிகளிலும் தேக்கி வைத்து, ஆண்டு முழுதும் பயன்படுத்துகின்றனர்.
நவரை, சம்பா, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களுக்கும் இந்த ஏரி தண்ணீர் அதிகளவு கைகொடுக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழை, விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
தற்போது, 'எல் நினோ' காரணமாக ஏற்படும் வறட்சியால் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், பல ஊராட்சிகள் சிரமத்தில் உள்ளன.
நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகள் உள்ளன. இதன் வாயிலாக, ஒரு லட்சத்து, 22,742 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியும்.
நீர்வள ஆதாரத்துறையின் தற்போதைய கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100 சதவீதமும், 75 சதவீதம் நிரம்பிய ஏரிகள் ஒன்று கூட இல்லை.
மேலும், 73 ஏரிகளில் 50 சதவீதமும், 125 ஏரிகளில் 25 சதவீதமும், 252 ஏரிகளில் 25 சதவீதம் கீழாகவும் தண்ணீர் உள்ளது. இவை, கொஞ்சம் கொஞ்மாக வறண்டு வருகின்றன. ஒரு ஏரியில் துளியும் தண்ணீர் இல்லை.
நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பினால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 12.32 டி.எம்.சி., தண்ணீரும், தேக்கி வைக்க முடியும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சூழலில், தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 1,000 ஏக்கருக்கு மேலாக வறட்சி பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக, தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளுக்கு, இந்த எண்ணிக்கை மேலும் மோசமடைய செய்யும் என்ற அச்சம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. வருண பகவான் கை கொடுப்பாரா என, விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
