ADDED : ஜன 30, 2024 04:22 AM

கோயம்பேடில் பேருந்து நிலையங்கள் இருந்த இடங்களை ஒன்று சேர்த்து பிரமாண்டமான பூங்கா அமைக்க தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.
மிகப்பெரிய பொது பூங்கா இல்லாத இந்திய பெருநகரம் சென்னை மட்டுமே.
நாட்டின் மிகப்பெரிய பூங்கா கோல்கட்டாவில் உள்ளது. இக்கோ பார்க் என அழைக்கப்படும் அந்த பூங்கா 480 ஏக்கரில் அமைந்துள்ளது.
இது தவிர மைதான் என்ற பெயரில், 400 ஏக்கர் பூங்கா ஒன்றும் வங்க தலைநகரை அலங்கரிக்கிறது.
ரபீந்திர சரோபர் -192 ஏக்கர், சுபாஷ் சரோபர் - 73 ஏக்கர், ஆகியவை கோல்கட்டாவின் மேலும் இரு பிரமாண்ட பூங்காக்கள். டில்லியில் 7 மெகா பூங்காக்கள் உள்ளன. அவற்றில் பெரியதுஆஸ்தா கஞ்ச் - 200 ஏக்கர், சிறியது தால்கட்டோரா கார்டன் - 48 ஏக்கர்.
மும்பை, ஹைதராபாத் நகரங்களும் 100 ஏக்கருக்கு மேல் பரந்துள்ள பூங்காக்களை கொண்டுள்ளன. பெங்களூரின் கப்பன் பார்க் 300 ஏக்கரில் அமைந்துள்ளது.
இந்தியாவின் டாப் 20 நகர பொது பூங்காக்களில் ஒன்று கூட சென்னையில் இல்லை. 385 ஏக்கர் தொல்காப்பியர் பூங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தளமாக பயன்படுத்தப்படுகிறது.
சாமானிய மக்கள் சகஜமாக சென்றுவர முடியாது என்பதால் இந்த லிஸ்டில் வரவில்லை.
காலியாகும் கோயம்பேடு பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து, அன்புமணியின் கோரிக்கையை அரசு செயல்படுத்தினால் சென்னைக்கும் பட்டியலில் இடம் கிடைக்கும்.