/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ரவுண்டானா அமைக்கும் பணி கிடப்பில்
/
காஞ்சியில் ரவுண்டானா அமைக்கும் பணி கிடப்பில்
ADDED : நவ 06, 2024 07:53 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கை எடுக்கிறது. இருப்பினும், போக்குவரத்து நெரிசல் குறைவதாக இல்லை. வெளியூர் சுற்றுலா பயணியரின் வாகனங்களும் கணிசமாக வருவதால், நெரிசலை குறைக்க மாற்று நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகமும், போலீசாரும் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, ரங்கசாமி குளம் அருகில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. காந்திரோடு ஒரு வழிப்பாதையாக இருந்தாலும், சிலர் விதிமீறி காந்திரோட்டில் எதிர் திசையில் காரில் செல்வதாலும் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், ரங்கசாமிகுளம் அருகில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ரவுன்டானா அமைக்க மாநகராட்சி நிர்வாகம், 2023ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரவுண்டானா மற்றும் அதை சுற்றி மேற்கொள்ள வேண்டிய பணிக்காக, மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து, 5.95 லட்ச ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை ரவுண்டானா அமைக்கும் பணிகள் கிடப்பில் உள்ளன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரங்கசாமிகுளம் அருகே ரவுண்டானா அமைக்க தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.