/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகள் துவக்கம்...ரூ.318 கோடி: வீடுதோறும் மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்க முடிவு
/
காஞ்சிபுரத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகள் துவக்கம்...ரூ.318 கோடி: வீடுதோறும் மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்க முடிவு
காஞ்சிபுரத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகள் துவக்கம்...ரூ.318 கோடி: வீடுதோறும் மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்க முடிவு
காஞ்சிபுரத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகள் துவக்கம்...ரூ.318 கோடி: வீடுதோறும் மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்க முடிவு
ADDED : ஜூன் 11, 2025 01:39 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தின் குடிநீர் தேவை, 2035ம் ஆண்டில் தினமும், 59 மில்லியன் லிட்டராக இருக்கும் என்று கணக்கிட்டுள்ள மாநகராட்சி 318 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்ட பணிகளை துவக்கியுள்ளது. மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிப்பது போல், குடிநீருக்கும் வீடுதோறும் மீட்டர் பொருத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல், ஓரிக்கை ஆகிய இரு பாலாறு திட்டங்கள் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகரில் வசிக்கும் இரண்டு லட்சம் பேரில், ஒருவருக்கு தினமும், 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆனால், மாநகராட்சிக்கு தினமும், 23.5 மில்லியன் லிட்டர் நீர்தான் கிடைப்பதால், ஒவ்வொரு நபருக்கும், 89 லிட்டர் தண்ணீரே வழங்க முடிகிறது. பற்றாக்குறை காரணமாக, பல இடங்களில் டேங்கர் லாரி வாயிலாக குடிநீர் சப்ளை செய்து நிலைமையை மாநகராட்சி சமாளிக்கிறது.
சில இடங்களில் தண்ணீர் சப்ளையே இல்லை. பெரும்பாலான இடங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் சப்ளை செய்யப்படுகிறது.
தற்போதே, மக்கள் குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கும் நிலையில், இன்னும் 10 ஆண்டுகளின் நிலை குறித்து, மாநகராட்சி ஆய்வு செய்தது.
இதன்படி, 2035ம் ஆண்டில் குடிநீர் தேவை, 59 மில்லியன் லிட்டராக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், 2035ம் ஆண்டு மக்கள் தொகை, 4.36 லட்சம் பேராக இருக்கும். புதிதாக இணைக்கப்பட்டுள்ள செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக மக்கள் வசிப்பார்கள் எனவும், கணக்கிடப்பட்டுள்ளது.
இதை கருத்தில் வைத்து, உலக வங்கி நிதியுதவியுடன், 318 கோடி ரூபாயில், குடிநீர் மேம்பாட்டுத் திட்ட பணிகளை துவக்கியுள்ளது.
தற்போது மாநகராட்சி முழுதும், குடியிருப்பு, வணிக ரீதியில் என, 32,687 குடிநீர் இணைப்புகள் உள்ளன. புதிய திட்டத்தின்கீழ், 55,000 குடிநீர் இணைப்புகள் மேலும் வழங்கப்பட உள்ளன.
ஏற்கனவே, 94 குடிநீர் தொட்டிகள் வாயிலாக, வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், 14 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது :
எதிர்கால தேவை கருதி துவக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டத்தின் வாயிலாக, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்ப்படும்.
வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மீட்டரும் பொருத்தி, பயன்படுத்தும் நீரின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
இப்புதிய திட்டத்தின் கீழ், 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஐந்து தண்ணீர் தொட்டிகள் உட்பட, பெரிய அளவிலான 14 குடிநீர் தொட்டிகள் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும். வரும் 2027ல் இத்திட்டம் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.