/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடலுக்குள் கதை எழுதி மாற்றுத்திறனாளி சாதனை
/
கடலுக்குள் கதை எழுதி மாற்றுத்திறனாளி சாதனை
ADDED : பிப் 15, 2024 10:38 PM

சென்னை:ராணிப்பேட்டை, திமிரி என்ற ஊரைச் சேர்ந்தவர் மணிஎழிலன், 45. மாற்றுத் திறனாளியான இவர், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியை, நீலாங்கரையைச் சேர்ந்த அரவிந்த, 40, என்பவரிடம் கற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், நீலாங்கரையில் இருந்து 6 கி.மீ., கடல் துாரத்தில், 60 அடி ஆழத்தில் கடலுக்குள் சென்று, தண்ணீரில் பயன்படுத்தக்கூடிய பேனாவால் கதை எழுதினார்.
அக்கதையை புகைப்படமாக எடுத்து, மொபைலில் 'வாட்ஸாப்' வாயிலாக நண்பர்களுக்கு அனுப்பினார். கடலுக்கு மேற்பரப்பில் இருந்த அவர்கள், 'பிரின்டர்' சாதனத்தில் பிரின்ட் எடுத்து, சிறு கையேடாக தயாரித்தனர்.
அந்த கையேடு, மணிஎழிலனிடம் வழங்கப்பட்டு, அவர் அதை, கடலுக்குள் வெளியிட்டார். அவருக்கு, தாரகை ஆராதனா, 10, சந்துரு, 55, ஆகியோர் உதவினர்.
பயிற்சியாளர் அரவிந்த் கூறியதாவது:
கடலோர பாதுகாப்பு துறை அனுமதி பெற்று, சுவாச உபகரணங்கள் அணிந்து கடலுக்குள் சென்றோம். தண்ணீரில் நனைந்தாலும் சேதமடையாத, 'வெட்புக்' என்ற காகிதம், பேனா பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 16 பக்கங்கள் உடைய கதை, 54 நிமிடத்தில் எழுதப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரவிந்த், கடலுக்கு அடியில் யோகா, சைக்கிள் ஓட்டியது, செஸ், கிரிக்கெட் விளையாடியது, தேசிய கொடியை பறக்கவிட்டது, திருமணம் நடத்தி வைத்தது என, பல சாதனைகள் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.