/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நிலாவில் இந்தியா செய்த சாதனைகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்!
/
நிலாவில் இந்தியா செய்த சாதனைகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்!
நிலாவில் இந்தியா செய்த சாதனைகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்!
நிலாவில் இந்தியா செய்த சாதனைகள்: இஸ்ரோ தலைவர் பெருமிதம்!
ADDED : மார் 08, 2025 07:55 PM

நாகர்கோயில்: '' நிலாவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் மூலம் அங்கு தண்ணீர் உள்ளதையும், தாது பொருட்கள் உள்ளதையும் கண்டுபிடித்துள்ளோம்,'' என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு இஸ்ரோ தலைவர்கள் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: 1962 ல் தான் நிலா தொடர்பான ஆராய்ச்சிகளை துவக்கினோம். நிலவிற்கு சந்திரயான் விண்கலம் அனுப்பப்பட்டது. பல நாடுகள் பல விண்கலங்களை அனுப்பி இருந்தன. ஆனால், நாம் தான் நிலாவில் தண்ணீர் உள்ளதை கண்டுபிடித்தோம். மற்ற நாடுகள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. தற்போது அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் மூலம் நிலாவில் இரும்பு, சிலிக்கன், கார்பன் உள்ளிட்ட எட்டு வகையான தாதுக்கள் இருப்பதை கண்டறிந்தோம்.
நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், அங்கு அது குறித்த தகவல் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. சூரியனை ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்த தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் பள்ளி மாணவர்களையும் சென்றடைய முயற்சிக்கிறோம். விண்வெளித்துறை அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மழை வருகிறதா , வரவில்லையா என தற்போது குழப்பம் ஏற்படுகிறது. அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ரயில்கள், 'ரியல் டைமில்' இணைக்கப்படுகிறது. இதுவரை 8,100 ரயில்கள் இணைக்கப்பட்டு உள்ளன. விரைவில் அனைத்து ரயில்களும் இணைக்கப்படும். இதன் மூலம் ரயில்களின் வருகையை மொபைல் போன் மூலம் கண்காணிக்கலாம். அதேபோல், படகு எங்கு உள்ளது என்பதையும் ஆராயவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, வாகனங்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்கவும் வழி செய்யப்பட்டு உள்ளது.விண்வெளித்துறையில், அனைவரும் ராக்கெட் சோதனைகளை தான் பார்க்கிறீர்கள். ஆனால், டிவி, தொலைத்தொடர்பு, மழை கணிப்புகள், பேரிடரை கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை செய்வது என சாமானிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பணியாற்றி வருகிறோம்.
சந்திரயான் 4 திட்டம் மூலம் நிலவில் தரை இறங்கி அங்கிருந்து தாது மற்றும் கனிமங்களை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்ய உள்ளோம். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டு கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆகும். அதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ நிச்சயம் செய்யும். இவ்வாறு நாராயணன் கூறினார்.