/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் வசதிஇல்லாததால் பயனற்ற நிலையில் குழாய்கள்
/
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் வசதிஇல்லாததால் பயனற்ற நிலையில் குழாய்கள்
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் வசதிஇல்லாததால் பயனற்ற நிலையில் குழாய்கள்
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் வசதிஇல்லாததால் பயனற்ற நிலையில் குழாய்கள்
ADDED : மார் 06, 2025 01:50 AM
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் வசதிஇல்லாததால் பயனற்ற நிலையில் குழாய்கள்
கரூர்:கரூர் ரயில்வே ஸ்டேஷனில், போதிய தண்ணீர் வசதி இல்லாததால், ரயிலுக்கு தண்ணீர் நிரப்ப அமைக்கப்பட்ட குழாய்கள் பயனற்ற நிலையில் உள்ளன.
தொழில் நகராக உள்ள கரூர் வழியாக நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள், நாட்டின் பல பகுதிகளுக்கு செல்கிறது. ஆயிரக்கணக்கான பயணிகள் கரூரில் இருந்து பயணம் செய்கின்றனர். கடந்தாண்டு செப்., மாதம் முதல், மதுரையில் இருந்து, கரூர் வழியாக கர்நாடகா மாநிலம், பெங்களூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி முதல் மயிலாடுதுறையில் இருந்து, கரூர் வழியாக சேலத்துக்கு புதிதாக விரைவு ரயிலும், திருச்சியில் இருந்து சேலத்துக்கு பயணிகள் ரயிலும், கழிப்பிட வசதியுடன் இயக்கப்படுகிறது. கரூரில் தண்ணீர் வசதி இல்லாததால், அந்த ரயில்களில் உள்ள கழிப்பிடங்கள், சேலம் ரயில்வே ஸ்டேஷனில்தான் சுத்தம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கரூரில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என, வர்த்தகர்கள், ரயில் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேசமயம், ரயில்வே ஸ்டேஷனில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், பயணிகள் அவதியுறுகின்றனர்.
ஆனால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் அறை, தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ரயிலுக்கு தண்ணீர் ஏற்ற வசதியாக, முதலாவது பிளாட்பாரத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த குழாய்கள் தற்போது வரை பயனற்ற நிலையில் உள்ளது.
இது குறித்து, கரூர் மாவட்ட மக்கள் கூறியதாவது:கரூரில் ஜவுளி, கொசுவலை மற்றும் பஸ் பாடி கட்டும் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல, மற்ற நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயிலை நம்பி, கரூர் மாவட்ட பயணிகள் உள்ளனர். சென்னைக்கு கரூரில் இருந்து ரயில் இயக்கப்படுவது இல்லை. நாள்தோறும் இரவு, 8:00 மணிக்கு வரும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலிலும், 9:00 மணிக்கு வரும் பாலக்கோடு எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை தேவைபகல் நேரத்தில் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால், ஈரோடு, திருச்சி மற்றும் சேலம் சென்று ரயிலை பிடிக்க வேண்டும். கரூரில் இருந்து ரயில்களை இயக்க, போதிய தண்ணீர் வசதி இல்லை என, அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். காவிரி மற்றும் அமராவதி ஆறுகளுக்கு இடையில் கரூர் நகரம் உள்ளது. ஏதாவது, ஒரு ஆற்றுப்பகுதியில் இருந்து, தனியாக குழாய் அமைத்து தாராளமாக தண்ணீர் கொண்டு வர முடியும். குறிப்பாக, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள, வாங்கல் காவிரியாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.