/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொலைந்த நகை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் மீட்பு
/
தொலைந்த நகை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் மீட்பு
ADDED : பிப் 26, 2025 01:04 AM
தொலைந்த நகை வாட்ஸ் ஆப் குரூப் மூலம் மீட்பு
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில், பாப்புலர் எக்ஸ்பிரஸ் என்ற வாட்ஸ் ஆப் குரூப்பின் மூலம், 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தொலைந்த நகை  மீட்கப்பட்டது.
அரவக்குறிச்சி அடுத்த பள்ளப்பட்டியில், 40க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்கள், 10க்கும் மேற்பட்ட கம்யூனிட்டி குழுக்கள் கொண்ட, 15,000 வாசகர்களை உள்ளடக்கிய பாப்புலர் எக்ஸ்பிரஸ் என்ற வாட்ஸ் ஆப் தளத்தின் வாயிலாக, எண்ணற்ற சமூக நல சேவைகள் செய்து வருகின்றனர். மேலும் வாட்ஸ் ஆப் என்பதை பொழுதுபோக்கும் தளமாக மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு
பயனுள்ளதாக மாற்றும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏதேனும் பொருட்கள் தொலைந்து விட்டால், அது குறித்து வாட்ஸ் ஆப் தளத்தில் பதிவிடப்படுகிறது. பலமுறை நகை மற்றும் பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளப்பட்டி பஸ் ஸ்டாண்ட் நிலைய தொலைபேசி நிலையம் அருகில், 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை  பவுன் தங்க செயின், கம்மல் உள்ளிட்ட பொருட்களுடன் இருந்த பர்ஸ் தொலைந்து விட்டது.  தொலைத்த நபர் ஆசிக் என்பவர், பாப்புலர் எக்ஸ்பிரஸ் வாட்ஸ் ஆப் தளத்தின் அட்மின் அபுதாகிரிடம் முறையிட்டதும், பாப்புலர் எக்ஸ்பிரஸ் தளங்களில் தொலைந்த செய்தி பகிரப்பட்டது.மறுநாள் வழியில் கிடந்த பர்ஸை பார்த்த, ஜைலாப்பா என்பவர் பாப்புலர் எக்ஸ்பிரஸ் குழுக்களின் அட்மினிடம் தகவல் தெரிவித்தார். உடனடியாக உரிமையாளரை அழைத்து, 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் அடங்கிய பர்ஸ் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொலைந்த நகைகள் கிடைத்தவுடன் உரிமையாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

