/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வி.சி., - தமிழ் புலிகள்கட்சியினர் மீது வழக்கு
/
வி.சி., - தமிழ் புலிகள்கட்சியினர் மீது வழக்கு
ADDED : ஏப் 16, 2025 01:05 AM
வி.சி., - தமிழ் புலிகள்கட்சியினர் மீது வழக்கு
கரூர்:கரூரில், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய வி.சி., மற்றும் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் மீது, போலீசார் வழக்குப்
பதிவு செய்துள்ளனர்.முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான டாக்டர் அம்பேத்கரின், பிறந்த நாள் விழா நேற்று முன்தினம், நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் முதல், மனோகரா கார்னர் வரை ஊர்வலம் நடத்தினர்.
இவர்கள், அனுமதி இல்லாமல் கூடியதாக, போலீஸ் எஸ்.ஐ., மாரிமுத்து அளித்த புகாரின் படி, கரூர் டவுன் போலீசார், மாநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட, 50 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல், கரூர் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில், அம்பேத்கர் சிலையை அமைக்ககோரி, கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் கொடுத்த புகார்படி, மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உள்பட, பலர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.

