/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்று பெண்களை காரில் கடத்தமுயன்ற பெங்களூ
/
மூன்று பெண்களை காரில் கடத்தமுயன்ற பெங்களூ
ADDED : மார் 15, 2025 02:41 AM
மூன்று பெண்களை காரில் கடத்தமுயன்ற பெங்களூரு தம்பதி கைது
குளித்தலை:குளித்தலையில், மூன்று பெண்களை காரில் கடத்த முயன்றதாக, பெங்களூருவை சேர்ந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., குப்புரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரத்தினகிரி, இவரது மனைவி கார்த்திகைசெல்வி, 45. இவர்களுக்கு பிரியங்கா, 27, பிரியதர்ஷினி, 25, பிரித்திகா, 23, என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிரியங்கா, கொல்லிமலை வனச்சரகத்தில் கடந்த, 2019ல், இருந்து வனவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டு வந்துள்ளார். இதற்கிடையில், நெசராலிட்டி வெப்சைட் மூலமாக, 7வது கிராஸ் அரண்மணை நகர், பெங்களூரு வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக், 41, என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த, 11ம் தேதி கார்த்திக், அவரது மனைவி கிரிஷ்மா, 39, ஆகியோர் காரில் குப்புரெட்டிபட்டி வந்து, மூன்று மகள்களையும் வேலைக்கு அழைத்து செல்வதாக அவர்களது பெற்றோரிடம் கூறினர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, உங்கள் மகள்கள் எங்களுடன் வர ஒத்துழைக்கின்றனர். நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கூறி, கார்த்திக், கிரிஷ்மா ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து, தொண்டு நிறுவனம் நடத்தி சமூக பணி செய்து வருவதாக கூறினர்.
இதில் சந்தேகமடைந்த அவர்கள், பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது, கார்த்திக் என்பவர், தங்கள் பள்ளியில் வேலை செய்யவில்லை என கூறவே, குளித்தலை போலீசாருக்கு கார்த்திகைசெல்வி புகார் தெரிவித்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் மூன்று பெண்களையும், கார்த்திக், அவரது மனைவி கிரிஷ்மா ஆகியோர் காரில் கடத்தி செல்ல தயாராக இருந்தனர்.
புகார்படி உடனே சம்பவ இடத்துக்கு வந்த, குளித்தலை போலீசார் காரில் இருந்த மூன்று பெண்களையும் மீட்டனர். இது குறித்து தம்பதியர் மீது, வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களது பி.எம். டபிள்யூ காரையும் பறிமுதல் செய்தனர். குளித்தலை நீதிமன்றத்தில் தம்பதியரை ஆஜர்படுத்திய பின், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வனவராக பணிபுரிந்து வந்த பிரியங்கா, பெற்றோரிடம் செல்ல மறுத்து, அங்குள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். மற்ற இரு மகள்கள், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றனர்.