/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுற்றுலா பஸ் மோதி ஐந்து பேர் காயம்
/
சுற்றுலா பஸ் மோதி ஐந்து பேர் காயம்
ADDED : ஏப் 04, 2025 01:05 AM
சுற்றுலா பஸ் மோதி ஐந்து பேர் காயம்
நாமக்கல்:நாமக்கல் ரயில்வே மேம்பாலம் தடுப்பு சுவரில், சுற்றுலா பஸ் மோதிய விபத்தில், ஐந்து பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, பாளையம்புதுார் அருகே உள்ள கோம்பை கிராமத்தை சேர்ந்த, 50 பேர் தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி கோவில்களுக்கு சுற்றுலா பஸ்சில் சென்றனர். மேலும், 15 பேர் மற்றொரு வேனில் சென்றனர். ஆன்மிக சுற்றுலாவை முடித்து விட்டு பஸ், வேனில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
சுற்றுலா பஸ் நாமக்கல் வழியாக தர்மபுரி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திவேல், 30, ஓட்டினார். அப்போது சுற்றுலா பஸ் நள்ளிரவு, 2:00 மணியளவில், நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.
இதில், பாளையம்புதுார் கோம்பை கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் ஹரி பிரசாந்த், 27, பழனி மகன் சத்யராஜ், 20, அன்னபூரணி, 57, காமராஜ நகரை சேர்ந்த அலமேலு, 53, உள்பட ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பஸ் டிரைவர் துாங்கியதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் தெரிகிறது. இருப்பினும் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

