/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை விரிவாக்க பணிக்கு பட்டியலின மக்கள் எதிர்ப்பு
/
சாலை விரிவாக்க பணிக்கு பட்டியலின மக்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 04, 2025 01:05 AM
சாலை விரிவாக்க பணிக்கு பட்டியலின மக்கள் எதிர்ப்பு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட, ஔவையார் தெருவில், 150 அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் மூன்று தலைமுறையாக கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு, 1958ம் ஆண்டு 50 வீடுகள் கட்டி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். இந்நிலையில் குடியிருப்பு பகுதியை ஒட்டி, மாநில நெடுஞ்சாலை 269 செல்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்கு முன் இருக்கும் அரசு நிலத்தை, பட்டியலின மக்கள் தங்கள் தேவைக்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாலையை விரிவாக்கம் செய்வதாக கூறி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு முன், அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது
குறித்து அவர்கள் கூறியதாவது:ஒரு மாதத்திற்கு முன், கரூர் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்தது. ஆனால், போக்குவரத்து பாதிக்கும் இடமான ஏவிஎம் கார்னர் முதல் புங்கம்பாடி வளைவு வரை உள்ள பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறவில்லை. இதே போல ஏவிஎம் கார்னர் முதல் பேரூராட்சி வரை எவ்வித சாலை அகலப்படுத்தும் பணியும் நடைபெறவில்லை. ஆனால் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, ஔவையார் பகுதி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,' சாலை விரிவாக்க பணி என்பது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் தற்போது நடந்து வருகிறது. வாகன பெருக்கத்தை அடிப்படையாக கொண்டு விரிவாக்க பணி நடக்கிறது. இதில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்
படுகிறோம் என்பது மிகவும் தவறானது,' என்றனர்.