/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வில்லுகாரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் திருவிழா
/
வில்லுகாரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் திருவிழா
ADDED : மார் 27, 2025 01:42 AM
வில்லுகாரன்பட்டியில் மாடு மாலை தாண்டும் திருவிழா
குளித்தலை:குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்,. வில்லுகாரன்பட்டியில் வசிக்கும், கம்பலத்து சமூகத்தினருக்கு வைஸ்பேர் மந்தையில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாலை தாண்டும் திருவிழா நடத்துவதற்கு, ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்து, காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
அன்று முதல் இப்பகுதி பக்தர்கள், எட்டு நாள் விரதம் இருந்து வைஸ்பேர் மந்தையில் உள்ள மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, தினமும் மூன்று கால சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். முதல் நாள் திருவிழா கடந்த, 23ல் தொடங்கியது. அன்று இரவு சுவாமி கிணற்றுக்கு சென்று மாரியம்மன் கரகம் பாலிக்கப்பட்டது. தொடர்ந்து தேவராட்டத்துடன் உருமி, தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் மாரியம்மன் திருக்கரகம் வீதி உலா வந்து கோவிலில் குடிபுகுந்தது.
மூன்றாம் நாள் விழாவின் போது, மாடு மாலை தாண்டும் விழா நடந்தது. முன்னதாக திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மாலை தாண்டும் விழாவிற்கு வருகை தந்த, 14 மந்தையர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சலை எருது மாடுகளுக்கு, மந்தையர்கள் வரிசைப்படி புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதன்பின், எல்லை கோட்டை நோக்கி, 300க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தன.
கரூர் மாவட்டம், வாலியம்பட்டி கோனாதாதா நாயக்கை மந்தை மாடு முதலாவதாகவும், திருச்சி மாவட்டம், எலமனம் ராஜகோடங்கிப்பட்டி ராஜகோடங்கி மந்தை மாடு இரண்டாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு, இவர்களின் வழக்கப்படி மூன்று கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியை துாவி, வரவேற்று எலுமிச்சை பழங்களை பரிசாக
வழங்கினர்.ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.