பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தவாரி: பக்தர்கள் பங்கேற்பு
பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தவாரி: பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 03, 2026 03:57 AM
கரூர்,கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, நேற்று அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த மாதம், 24ல் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை பங்குனி உத்திரதிருவிழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பசுபதீஸ்வரர், அலங்கார வள்ளி, சவுந்திர நாயகி, நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள் சிறப்பு வாகனங்களில் திருவீதி உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ஆளும் பல்லாக்கு, நாளை ஊஞ்சல் உற்சவம், வரும், 5ல் வெள்ளி வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
