ADDED : மார் 30, 2025 01:09 AM
நிழற்கூடம் இல்லாத வாங்கல் பிரிவு
கரூர்:கரூர் அருகே வாங்கல் பிரிவு பகுதியில், நிழற்கூடம் அமைக்காததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரூர் அருகே உள்ள, வாங்கல் பிரிவு மற்றும் பசுபதிபாளையம் சாலை, ஐந்து சாலை என அழைக்கப்படுகிறது. கரூர் அருகே வாங்கல், நெரூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்ல, பொதுமக்கள் ஐந்து சாலை பஸ் ஸ்டாப்பில் இருந்து பஸ்களில் ஏறி செல்ல வேண்டும்.
அதே போல் வாங்கல், நெரூர் பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள், பசுபதிபாளையம் செல்ல, வாங்கல் பிரிவில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். இதனால், வாங்கல் பிரிவில், பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால், வாங்கல் பிரிவு பகுதியில் நிழற்கூடம் இல்லாததால், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், கரூர் வாங்கல் பிரிவு பகுதியில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.