ADDED : ஏப் 15, 2025 02:08 AM
கரூரில் தமிழ் புத்தாண்டு கோலாகலம்
கரூர்:தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, கரூர் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.தமிழகம் முழுவதும், நேற்று தமிழ்புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், மூலவர், உற்சவர்களுக்கு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து நடந்த, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு தமிழிசை நிகழ்ச்சியும் நடந்தது.
மேலும், கரூர் மாரியம்மன் கோவில், வேம்பு மாரியம்மன் கோவில், கல்யாண வெங்கடரமண கோவில், மாரியம்மன் கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழி மலை பால தண்டாயுதபாணி கோவில், பாலமலை முருகன் கோவில்களில் நேற்று காலை, தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கரூர் அண்ணா நகர் கற்பக விநாயகர் கோவிலில், 1,500 கிலோ எடை மதிப்பில் காய்கள், பழங்களில் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல், கரூர் ஐயப்பன் கோவிலில், மூலவர் காய்கறி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புதுமண தம்பதிகள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை வழிபட்டனர். மேலும், தமிழ் புத்தாண்டையொட்டி, வீடுகளில் கனிகள் காணும் நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடந்தன.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு யாக வேள்வி, பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.