/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மகாலட்சுமி கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஆக 05, 2024 02:23 AM
கிருஷ்ணராயபுரம்,
மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தி, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரத்தில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு பண்டிகையின் அடுத்த நாளான, ஆடி, 19ல் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்பு வழிபாடு பூஜை நடத்தப்படுகிறது.
இந்தாண்டு நடத்தப்பட்ட விழாவில், நேற்று காலை மகாலட்சுமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா சென்று, கோவில் வளாகத்தை அடைந்தது. பின், கோவில் கொடி மரத்தில், காலை, 9:15 மணிக்கு நெய் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் கோபுரம் மேல்புற பகுதியில் கருடன் (கழுகு) மூன்று முறை வலம் வந்தது. கருடன் உத்தரவு வழங்கிய பின், கோவில் பூசாரி பெரியசாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு முதலில் சக்தி தேங்காய் உடைத்தார்.
தொடர்ந்து, கோவில் வளகம் முன் அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில், கோவில் பூசாரி தேங்காய் உடைத்தார். இதில், 570க்கு மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, மகாலட்சுமி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட பக்தர்கள், 10 பேருக்கு, சிறிய காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமில், டாக்டர் பார்த்திபன் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகள், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்தது. மேலும், லாலாப்பேட்டை, மாயனுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் உள்பட பல பகுதியில் இருந்து ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.