ADDED : மே 14, 2024 07:49 PM

கரூர்:கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் புதுார் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் அஷ்வின், 11; தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் ஸ்ரீ விஷ்ணு, 14; அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். ஆண்டாங்கோவில் கிழக்கு செல்வநகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் மாரிமுத்து, 13; அரசு பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
மூவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் மாலை, ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள, ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீச்சல் தெரியாததால் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த விபரம் தெரியாமல், சிறுவர்களின் குடும்பத்தினர், மூவரையும் காணவில்லை என விடிய, விடிய பல இடங்களில் தேடியுள்ளனர்.
நேற்று அதிகாலை கிணற்றில் மேல் பகுதியில், சிறுவர்களின் உடை, செருப்புகள் இருந்ததை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கரூர் தீயணைப்பு துறை வீரர்கள், நீரில் மூழ்கி இறந்த மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டனர். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

