/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
/
சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 11, 2024 11:53 AM
கரூர்: கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில், சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, மாவட்ட தலைமை நீதிபதி சண்முகசுந்தரம், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி அண்ணா வளைவு, கரூர் மாரியம்மன் கோவில், ஜவஹர் பஜார், அரச மரத்தெரு வழியாக மீண்டும் பழைய நீதிமன்ற வளாகத்தை அடைந்தது.
பேரணியில் பங்கேற்ற கல்லுாரி மாணவ, மாணவியர், பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். பேரணியில், நீதிபதிகள் எழில், கனகராஜ், கோகுல் முருகன், மகேந்திர வர்மா, உமா மகேஸ்வரி, சுஜாதா, நித்யா, சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பாக்கியம் உள்பட, பலர் பங்கேற்றனர்.
சட்ட விரோத மது விற்பனை 183 பாட்டில்கள் பறிமுதல்
கரூர்: கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 183 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 183 மது பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாக, 19 பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தைல மரங்கள் தீயில் கருகியது
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில், தைல மரங்கள் தீயில் நாசமாயின. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புதுார் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 56; இவர், தோட்டத்தில் தைல மரங்களை சாகுபடி செய்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று தைல மர தோட்டத்தில் இருந்த, காய்ந்த சருகுகள் தீ பிடித்து எரிந்தது. அப்போது, தைல மரங்களுக்கும் பரவியது.
தகவல் அறிந்த, வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர். ஆனால், 50க்கும் மேற்பட்ட தைல மரங்கள் தீயில் நாசமாயின. இதனால், வேலாயுதம்பாளையம் புதுார் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

