/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலை கோவில் ரோப்கார் பழுது அந்தரத்தில் தொங்கிய 3 பேர் மீட்பு
/
அய்யர்மலை கோவில் ரோப்கார் பழுது அந்தரத்தில் தொங்கிய 3 பேர் மீட்பு
அய்யர்மலை கோவில் ரோப்கார் பழுது அந்தரத்தில் தொங்கிய 3 பேர் மீட்பு
அய்யர்மலை கோவில் ரோப்கார் பழுது அந்தரத்தில் தொங்கிய 3 பேர் மீட்பு
ADDED : ஜூலை 26, 2024 01:33 AM

குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் செங்குத்தாக 1,017 படிகள் கொண்டது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மலை ஏறி ரத்தினகிரீஸ்வரரை தரிசனம் செய்ய வசதியாக ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்று
நேற்று முன்தினம் காலையில் முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக பொதுமக்கள்பயன்பாட்டுக்கு, இக்கோவிலில் ரோப்கார் சேவையை துவங்கி வைத்தார். ரோப்காரில் செல்ல ஒருவருக்கு 50 ரூபாய், திரும்பி வருவதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் 2:30 மணிக்கு மலையில் இருந்து கீழே நான்கு ரோப்கார் பெட்டிகளில் எட்டு பேர் வந்து கொண்டிருந்தனர்.
கோவில் அருகே வரும்போது, பலத்த காற்று வீசியதால் கம்பி தடம் புரண்டு பழுது ஏற்பட்டது. பெட்டியில் அமர்ந்து வந்தவர்கள் கூச்சலிட்டனர்.
உடனே கோவில் பணியாளர்கள், ரோப்கார் பணியாளர்கள் உதவியுடன் ஏணி வாயிலாக எட்டு பேரையும் பாதுகாப்புடன் மீட்டனர்.
இதற்கிடையே, மற்றொரு பெட்டியில் வந்து கொண்டிருந்த, திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்த பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியக்காள், 43, ராசாம்மாள், 45, கோசலை, 42, ஆகியோர் அந்தரத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
தற்காலிக நிறுத்தம்
ரோப்கார் ஊர்தி பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் உதவியுடன் இரண்டு மணி நேரம் போராடி, 4:30 மணிக்கு பழுது சரி செய்யப்பட்டது. பின், மூன்று பேரையும் திரும்ப மலை மேல் இறக்கி விட்டனர். பாதுகாப்பாக மூன்று பெண்களும் மலை அடிவாரத்திற்கு திரும்பினர்.
இச்சம்பவத்துக்கு பின், திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை, ரோப்கார் ஊர்தி பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் செயல் அலுவலருடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.

