/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் 359 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
/
மாவட்டத்தில் 359 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED : செப் 08, 2024 01:06 AM
கரூர், செப். 8-
கரூர் மாவட்டம் முழுதும், 359 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கரூரில் இன்று மாலை, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, காவிரியாற்றில் கரைக்கப்பட உள்ளது.
நாடு முழுதும் நேற்று, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்தில், ஹிந்து முன்னணி சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், குளித்தலை, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 200 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன், பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன், நேற்று அதிகாலை, 10 அடி உயரம் உள்ள காமதேனுவுடன் கூடிய விநாயகர் சிலை,ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று மாலை, 6:00 மணிக்கு, 80 அடி சாலைக்கு கொண்டு வரப்படுகிறது. கரூர் மாவட்டம் முழுதும், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், 359 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கரூரில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 80 அடி சாலையில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வாங்கல் காவிரியாற்றில் கரைக்கப்பட உள்ளது. அதேபோல், க.பரமத்தி, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள், அமராவதி ஆற்றிலும், இன்று மாலை கரைக்கப்பட உள்ளது.
* கரூர் தேர்வீதி ஸ்ரீவிஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று காலை, 7:00 மணிக்கு வேத பாராயணம், மூர்த்தி ஹோமங்களுடன் தொடங்கியது. பின், 9:00 மணி முதல், 10:30 மணி வரை மூலவர் விநாயகருக்கு, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் விநாயகர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், கரூர் எல்.ஜி.பி., நகர் குபேரசக்தி விநாயகர் கோவில், ரங்கநாயகிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் ஆகியவற்றில், மூலவர் வெள்ளி கவசம் அலங்காரத்திலும், கரூர் ஜவஹர் பஜாரில் செல்வ விநாயகர் கோவில், அண்ணாநகர் கற்பக விநாயகர் கோவில் ஆகியவற்றில், மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபட்டனர்.