ADDED : மே 19, 2024 03:02 AM
கரூர்: கரூரில் இருந்து, தேனிக்கு சென்ற அரசு பஸ்சில் இருக்கை கழன்று விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர்--1, கரூர்--2 பணிமனை, அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி ஆகிய பணிமனைகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 280 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தரச்சான்று பெறப்பட்டு இயக்கப்படுகிறது.
கரூர் மண்டலத்தை தவிர, திருச்சி, ஈரோடு, மதுரை, சேலம் மண்டலங்களில் இருந்து கரூர் வழியாக, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
இவை பெரும்பாலும் பழைய வாகனங்களாக இருப்பதால், அடிக்கடி பழுது ஏற்பட்டு நடு வழியில் நின்று விடுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை தரச்சான்றிதழ் பெறுவதற்காக பஸ்சிற்கு பெயின்ட், கூரை பராமரிப்பு, சீட், கம்பிகள் புனரமைப்பு, வாகன பழுது நீக்குதல் செய்யப்படுகிறது. தரச்சான்றிதழ் பெறுவதற்கு, இடைப்பட்ட காலத்தில் பஸ்களில் ஏற்படும் பழுதை மட்டும் நீக்குகின்றனர்.
ஆனால் சீட், கம்பி, ஜன்னல் கம்பிகள், ஜன்னல் கண்ணாடிகள், கூரைகள் சேதமானால் அதை சரிசெய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அடுத்தாண்டு தரச்சான்றிதழ் பெறும் முன்பு சரிசெய்து கொள்ளலாம் என விட்டு விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில், மழை நீர் ஒழுகக்கூடிய பஸ்களில் செல்வதற்கு சிரமமாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மதுரை கோட்டம் சார்பில், கரூரில் இருந்து தேனிக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று வழக்கம் போல, பஸ்சில் ஏறி இருக்கையில் அமருவதற்கு முன்பாகவே, சீட்டின் மேல் பகுதி தானாக கழன்று விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த வாரம் திருச்சிக்கு பஸ் சென்று கொண்டு இருந்த போது, சீட்டுடன் ரோட்டில் கண்டக்டர் விழுந்து காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியத்து.
அரசு பஸ்களில் உள்ள குறைகளை சரி செய்ய, அதிாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

