PUBLISHED ON : ஆக 05, 2024 12:00 AM
ஆகஸ்ட் 5, 2001 : காஞ்சிபுரத்தில், ரத்தினசாமி - ராஜகண்ணம்மாள் தம்பதியின் மகளாக, 1945, செப்., 9ல் பிறந்தவர் அரசு மணிமேகலை. தமிழ் இலக்கியத்தில், முனைவர் பட்டம் பெற்ற இவர், கல்லுாரி பேராசிரியராக பணியாற்றினார். தமிழக திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சி திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்தார். 1968ல், சென்னையில் நடந்த, இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு சிறப்பு மலர் பொறுப்பாசிரியராகவும் விளங்கினார். வானொலி, தொலைக்காட்சி உரைகளையும், ஆய்வு கட்டுரைகளையும் எழுதினார்.
சில திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்களையும் எழுதியுள்ளார். 'ஒரு வானம்பாடி வாய் திறக்கிறது, மழலைப் பூக்கள்' உள்ளிட்ட கவிதை நுால்கள்; 'நாடும் வீடும் நலம் பெற, தமிழகத்து மும்மணிகள்' உள்ளிட்ட கட்டுரை நுால்கள்; 'புல்லை தின்னும் புலிகள், மூன்று கால் மனிதர்கள்' உள்ளிட்ட சிறுகதை நுால்கள்; 'கனவு சுமக்கும் கண்கள், என்றும் தொடரும் பயணம்' உள்ளிட்ட புதினங்கள் என, 54 நுால்களை எழுதியுள்ளார்.
அவற்றில் சில, பல்கலைகளில் பாடமாகவும் இருந்தன. 'பாவேந்தர், கலைமாமணி, ஜான்சிராணி, வேலு நாச்சியார், அருந்தமிழ்த் தென்றல்' உள்ளிட்ட விருதுகளை பெற்றார். இவர் தன், 56வது வயதில், 2001ல் இதே நாளில் மறைந்தார்.
பெண்ணியக் கவிஞரின் நினைவு தினம் இன்று!