ADDED : ஏப் 06, 2026 10:55 PM
கரூர்: காரில் கள்ள நோட்டுகளை கடத்திய மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பிரிவு என்ற இடத்தில், நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையம் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது, வேகமாக வந்த இரு கார்களை நிறுத்தி, சோதனை செய்தனர்.
காரில், நான்கு பைகளில் உண்மையான, 500 ரூபாய் நோட்டுகளுடன், கள்ள நோட்டுகளும், பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய, 100 ரூபாய் நோட்டுகளும் கட்டு கட்டாக இருந்தன. இதையடுத்து, இரு கார்களில் வந்த மூவரையும், போலீசார் வேலாயுதம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது, பணம் இரட்டிப்பு மோசடி செய்ய, அசல் மற்றும் கள்ள நோட்டுகளுடன், ஈரோடில் இருந்து காரில் மூவரும் வந்தது தெரிந்தது. அவர்கள் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரை சேர்ந்த சுந்தரமூர்த்தி, 56, திருப்பூர் அரிக்காரன்வலசு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 25, கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், 38, என போலீசார் விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து இரண்டு கார், 19 மொபைல் போன்கள், ஒரு பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலாயுதம்பாளையம் போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
