/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 8.89 லட்சம் வாக்காளர்கள்
/
கரூர் மாவட்டத்தில் 8.89 லட்சம் வாக்காளர்கள்
ADDED : அக் 30, 2024 01:26 AM
கரூர், அக். 30-
கரூர் மாவட்டத்தில், வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நான்கு தொகுதிகளில், 8.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கலெக்டர் தங்கவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில், நான்கு லட்சத்து, 27 ஆயிரத்து, 406 ஆண்களும், நான்கு லட்சத்து, 61 ஆயிரத்து, 787 பெண்களும், 80 இதர என மொத்தம், எட்டு லட்சத்து, 89 ஆயிரத்து, 273 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், இடமாற்றம் மனுக்கள்அளிக்க கால அவகாசம் வரும் நவ., 28 வரையிலும், மனுக்கள் பெற சிறப்பு முகாம் நவ., 16, 17, 23, 24 ஆகிய நாட்கள் நடக்கும்.
ஒவ்வொரு ஓட்டுச்சாவடி நிலை முகவர்களும் ஒரு நாளைக்கு தலா, 10 வீதம் அதிகபட்சமாக, 30 படிவங்கள் வரை சமர்ப்பிக்கலாம். அனைத்து கோரிக்கை மனுக்களிலும் வாக்காளர் ஆதார் எண்ணை குறிப்பிடவேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரும் மனுதாரர், 21 வயதுக்கு மேற்பட்டவராயின், அவர் முன்பு வசித்து வந்த முகவரி கட்டாயம் படிவம், -6ல் குறிப்பிட வேண்டும்.
ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு, தற்போது முகவரி மாற்றம் கோரும் வாக்காளர்கள், முன்பு வசித்து வந்த முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை கட்டாயம் படிவம், 8ல் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக வரிசை எண்கள் கொண்டுள்ள புதிய படிவங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன், 84.26 சதவீதம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://voterportal.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம்,
இவ்வாறு கூறினார்.
டி.ஆர்.ஓ., .கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் ஸ்வாதிஸ்ரீ, கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட பலர் பங்கேற்றனர்.