ADDED : ஏப் 06, 2026 06:21 AM

கரூர்:கரூர்
மாநகராட்சி பகுதிகளில், 65,000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள்
உள்ளன. இதற்காக, காவிரியாற்றில், வாங்கல், கட்டளை பகுதிகளில்
அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையங்கள் மூலம், தண்ணீர் மேல்நிலை
குடிநீர் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின், குழாய்
மூலம் பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு
வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் வினியோகம்
செய்யப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக
வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து
விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கரூர்
மாநகராட்சி பகுதியில் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில்,
நேற்று கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில், குழாய் உடைந்து தண்ணீர்
வீணாக சாலையில் சென்றது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர்
வினியோகம் செய்யப்படும் நாட்களில் மட்டும், தண்ணீர் சாலையில்
செல்வதால், மாநகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை கண்டுகொள்வது
இல்லை.
எனவே, கோடைகாலம் தீவிரம் காட்டும் நிலையில், குடிநீர்
தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,
கரூர் மாநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில், கரூர்
பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை, உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை
எடுக்க வேண்டியது அவசியம்.
