/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜோதிமணிக்கு போடும் ஓட்டு 'நோட்டா'வுக்கு சமம்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
/
ஜோதிமணிக்கு போடும் ஓட்டு 'நோட்டா'வுக்கு சமம்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
ஜோதிமணிக்கு போடும் ஓட்டு 'நோட்டா'வுக்கு சமம்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
ஜோதிமணிக்கு போடும் ஓட்டு 'நோட்டா'வுக்கு சமம்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
ADDED : ஏப் 08, 2024 07:32 AM
கரூர் : ''காங்., கட்சி ஜோதிமணிக்கு போடும் ஓட்டு, 'நோட்டா'வுக்கு போடுவதற்கு சமம்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் லோக்சபா தொகுதி, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட, புன்னம் சத்திரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:தமிழகம் முழுதும் போதை பொருட்கள், கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதனால், மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க.,வில் அயலக அணி செயலாளராக இருந்த ஜாபர் சாதிக், போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். அவர் விசாரணையின் போது, முழுமையாக வாயை திறந்தால், தி.மு.க., அரசு, மூன்று அமாவாசைகளில் வீட்டுக்கு போய் விடும். சட்டம் - ஒழுங்கு சீரழிவு, பெண்கள் பாதுகாப்பு இல்லாதது, விலைவாசி உயர்வு, போதை பொருட்கள் விற்பனை காரணமாக, தி.மு.க., அரசு செயல் இழந்து விட்டது.
ஒரு பவுன் தங்கம் விலை, 53,000 ரூபாயை தாண்டி விட்டது. 60,000 ரூபாய்க்கு வரும் என்கின்றனர். அதை உணர்ந்து தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். இதனால், ஏழை பெண்கள் பயனடைந்தனர். ஆனால், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, விடியா தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. அதுமட்டுமல்ல, அ.தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்காக, வீடு தேடி சென்ற அனைத்து திட்டத்தையும், தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை தருவதாக சொன்ன, முதல்வர் ஸ்டாலின் பாதி பெண்களுக்கு தரவில்லை.பொய்களால் கட்டமைக்கப்பட்ட கட்சிதான், தி.மு.க., தற்போது, அவர்களுடன் காங்., கட்சியும் சேர்ந்து கொண்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த, 2011 முதல், 2021 வரை செயல்படுத்தப்பட்ட திட்டங்களை, காங்., வேட்பாளர் ஜோதிமணி சொந்தம் கொண்டாடி பேசி வருகிறார். இந்த முறை அழுது புலம்பினாலும், கரூர் லோக்சபா தொகுதி மக்கள் நம்பமாட்டார்கள். கடந்த, 2019ல் வெற்றி பெற்ற பின், தொகுதி பக்கம் வராதவர் ஜோதிமணி.
ஆனால், கரூர் தொகுதியில் தோற்ற பின்பும், ராஜ்யசபாவில் கரூர் தொகுதி வளர்ச்சி குறித்து, தம்பிதுரை தொடர்ந்து பேசி வருகிறார். வரும் தேர்தலில், ஜோதிமணியை மீண்டும் வெற்றி பெற வைத்து, ஏமாந்து விட வேண்டாம். ஜோதிமணிக்கு போடும் ஓட்டு, நோட்டாவுக்கு போடுவதற்கு சமம்.
அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல், கரூர் தொகுதியில் இருப்பார். நிர்வாக திறன் கொண்ட, வேட்பாளர் தங்கவேல், கரூர் தொகுதி மக்களின் முகமாக, லோக்சபாவில் செயல்பட்டு, பல புதிய திட்டங்களை கொண்டு வருவார். மத்திய அரசு மூலம், கரூர் தொகுதிக்கு பெற வேண்டிய திட்டங்களை வாதாடி வாங்கி தருவார். தங்கவேலுவை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, வேட்பாளர் தங்கவேல், க.பரமத்தி பஞ்., யூனியன் தலைவர் மார்க்கண்டேயன், தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலாளர் அரவை முத்து உள்ளிட்ட, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

