ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு அவசியம்
ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்கு அவசியம்
ADDED : மே 30, 2026 05:03 AM

கரூர்: கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையில், கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டில் ரயில்வே கேட்களை, நிரந்தமாக மூடும் வகையிலும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட் பகுதியில், குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில், இந்திய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் தொழிற்பேட்டை- சணப்பிரட்டி இடையே குகை வழிப்பாதை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது, குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
சுமார், 25 அடி பள்ளத்தில் குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குகை வழிப்பாதை, பகல் நேரத்திலும் இருள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. குகை வழிப்பாதையில், இரண்டு பக்கமும் உள்ள மின் விளக்குகளும் சரிவர எரிவது இல்லை. இதனால், இரவு நேரத்தில் குகை வழிப்பாதையாக நடந்து செல்லும் பொது மக்கள், வாகனங்களில் செல்வோர் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.
எனவே, கரூர் தொழிற்பேட்டை-சணப்பிரட்டி இடையே உள்ள, ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதலாக மின் விளக்குகளை அமைக்க, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
