/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட கோவில்களில் அக்னி நிவர்த்தி அபிஷேகம்
/
கரூர் மாவட்ட கோவில்களில் அக்னி நிவர்த்தி அபிஷேகம்
ADDED : மே 30, 2025 01:16 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், அக்னி நட்சத்திரம் நிவர்த்தியாக சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடந்த, 4 முதல், 28ம் தேதி வரை கோடை காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது. அப்போது, தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்தாண்டு, கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 104 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்று முன்தினம் அக்னி நட்சத்திர காலம் நிறைவு பெற்றது.
இதையடுத்து நேற்று, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திரம் நிவர்த்தியாக, 108 கலச பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* க. பரமத்தி அருகில், புன்னத்தில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோவிலில் அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு, புன்னைவன நாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
* நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், திருக்காடுத்துறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.