ADDED : ஜூன் 21, 2026 04:08 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பணிகளை துவக்கியுள்ளனர்.
கரூர்
மாவட்டத்தில், கடந்தாண்டு வட கிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு
பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்தது. வழக்கமாக, மே மாத இறுதி
அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும்.
நடப்பாண்டு, இம்மாதம் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. டெல்டா
மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்
திறக்கப்படவில்லை. குடிநீருக்காக காவிரியாற்றில் வினாடிக்கு,
1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம்,
உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு, தென்மேற்கு பருவமழை காரணமாக
தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இம்மாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல்
வாரத்தில், சாகுபடி பணிக்காக, அமராவதி ஆற்றில் தண்ணீர்
திறக்கப்படும். தற்போது, வினாடிக்கு, 502 கன அடி தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், கரூர் மாவட்டம், கட்டளை மற்றும்
மணவாசி பகுதிகளில் காவிரியாற்றில் கலக்கும். ஈரோடு மாவட்டம்,
பவானிசாகர் அணைக்கும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது
வினாடிக்கு, 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர்,
பவானி கூடுதுறை என்ற இடத்தில், காவிரியாற்றில் கலக்கும்.
இந்நிலையில்
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக, தண்ணீர் திறக்க
வாய்ப்பு உள்ளதால், அமராவதி அணை மற்றும் பவானிசாகர் அணைகளின் தண்ணீர்
இன்னும், ஒரு சில நாட்களில் காவிரியாற்றில் கரைபுரண்டு ஓட போகிறது.
இதனால் கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி, தான்தோன்றிமலை,
கிருஷ்ணராயபுரம், குளித்தலை யூனியன் பகுதிகளில் விவசாயிகள், சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர்.
குறிப்பாக, புகழூரில்
வெற்றிலை, நெரூரில் கோரைபுல், நெல், கரும்பு, லாலாப்பேட்டை,
குளித்தலையில் வாழை, வெற்றிலை, ஆண்டாங்கோவில் பகுதியில் மஞ்சள்
சாகுபடி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. இதை தவிர, எண்ணைய் வித்து
பயிர்கள் சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
