/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 16, 2024 11:46 AM
குளித்தலை: குளித்தலை அருகே, வடுகப்பட்டியில் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.
குளித்தலை அடுத்த, போத்தராவுத்தன்பட்டி பஞ்., வடுகப்பட்டி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ளது. விஸ்வகர்மா ஆறு நாட்டு மக்களுக்கு, குலதெய்வமாக விளங்கும் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த, 13ல் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. புனித நீரை கும்பத்தின் மீது ஊற்றி, சிவாச்சாரியார்கள் யாகவேள்வியில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து பூஜை, வேத பாராயணம், லட்ச்சார்ச்சனைகளை செய்தனர்.
நேற்று காலை நான்காம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனித நீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
வானில் கருடபகவான் வட்டமிட்டதையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் என பலர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.