/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி பூங்காவில் சமூக விரோத செயல்கள்
/
கரூர் மாநகராட்சி பூங்காவில் சமூக விரோத செயல்கள்
ADDED : டிச 27, 2024 07:30 AM
கரூர்: காந்திகிராமம், மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாததால், சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.
கரூர் அருகே, தெற்கு காந்திகிராமம் மாநகராட்சியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொழுதை கழித்தும், நடைபயிற்சியிலும் மக்கள் ஈடுபட்டு வந்தனர். ஊஞ்சல், சறுக்கு மரம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் ஆகியவை உள்ளன. இதில், அப்பகுதி சிறுவர்கள் விளையாடி வந்தனர். உரிய பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, பூங்காவை மாநகராட்சி சார்பில் பராமரிப்பு செய்யாமல் திறந்து கிடக்கிறது. பூங்கா உள்ள இடத்தில் பல்வேறு செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. பூங்கா மரத்தடிகளின் கீழ் அமர்ந்து, மது குடிப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சிறுவர்களுக்கு பூங்கா மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மூன்று ஆண்டுகளாக பூங்காவை மாநகராட்சியினர் பராமரிக்காமல் விட்டுள்ளனர். தற்போது குடிப்பவர்களின் மினி பாராக மாறி விட்டது. பூங்காவை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அருகில் உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு பள்ளி மாணவிகள், பெண்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, ஆபத்து நிகழ்வதற்குள், உடனடியாக போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு, சமூக விரோதிகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

