/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
33 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தேர் வெள்ளோட்டம்
/
33 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தேர் வெள்ளோட்டம்
ADDED : மே 01, 2025 01:25 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த, ஆர்.டி.மலையில் சோழ மன்னர்களால் நிறுவப்பட்டு திருப்பணி செய்யப்பட்டு உள்ள சிவாலயங்களில், ஒன்றான பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரர் மலைக்கோவிலில் அமைந்துள்ளது.
வடசேரி, பில்லுார், சேங்குடி நாட்டார்கள், தேர் திருவிழா மண்டகப்படிதாரர்கள், குடிபாட்டு பக்தர்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவில் தேவஸ்தானத்தில், 33 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. பின்னர் அனைவரின் முயற்சியால், நின்றிருந்த 10 நாள் பெரியதேர் திருவிழாவானது வரும், 3ல் தொடங்க உள்ளது.
இதையடுத்து, கோவில் முன்பாக இருந்த, 627 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட பழமையான பெரியதேர் பழுதடைந்து இருந்தது. அனைவரும் ஒன்று சேர்ந்து இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களை பி.எச்.இ.எல், நிறுவனத்தில் உருவாக்கப்பட்டு, ரூ.67 லட்சம் மதிப்பில் சிற்ப வேலைகளை சிறப்பாக செய்து வந்தனர்.
இந்த பெரய தேர் சிம்மாசனம் உயரம், பூமி மட்டத்தில் இருந்து, 16 அடி, 3 அங்குலம் உயரத்தில் ஸ்தபதி பாலசிவங்கர் தலைமையில் சிறப்பிகளால் கலைநயங்களுடன் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து பெரியதேர் திருப்பணிகள் முழுமை பெற்று, கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு முடிவு செய்தனர். பின்னர் பல்வேறு நதிகளில் இருந்து புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு கோவில் முன்பாக வைத்து பூஜை செய்தனர்.
அதனை தொடர்ந்து பெரியதேருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பரம்பரை அறங்காவலர் பொன்னம்பலம் மற்றும் திருப்பணிக்குழு தலைவர், மணப்பாறை சிந்துஜா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலையரசன் ஆகியோர் தலைமையில், திருத்தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரர் உற்சவரை பக்தர்கள் கையில் சுமந்து கொண்டு முன் செல்ல, மலைக்கோவிலை சுற்றி உள்ள நான்குமாட வீதிகளில் கம்பீரமாக பெரிய தேர் வீதி உலா வந்தது. பின்னர் தேர் நிலைக்கு நின்றவுடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

