கரூரில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை பணி மும்முரம்
கரூரில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை பணி மும்முரம்
ADDED : பிப் 12, 2026 06:51 AM
கரூர்: பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிகின்றன.
கேரளா மாநிலம் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் காடை, கோழிகளில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை பறவை காய்ச்சல் நோய் தாக்குதல் இங்கு இல்லை. கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழி பண்ணைகள், புறக்கடை கோழிகளை நேரில் பார்வையிட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கக் கூடாது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக கேரளாவில் இருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால், அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோழி பண்ணைக்குள் செல்பவர்களும், வெளியே வருபவர்களும் கிருமி நாசினியால் கால்களை சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்பு ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சமையலறை மற்றும் இறைச்சி கூடத்தில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பறவை காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
இத்தகவலை, கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
