உடல்களை மாற்றிக்கொடுத்து மதுரை ஜி.ஹெச்.,சில் குளறுபடி
உடல்களை மாற்றிக்கொடுத்து மதுரை ஜி.ஹெச்.,சில் குளறுபடி
ADDED : மார் 10, 2026 02:44 AM

கரூர்: மதுரை அரசு மருத்துவமனை யில், இறந்தவர்களின் உடலை மாற்றிக் கொடுத்து குளறுபடி செய்ததால், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ், 64; கரூர் மாவட்ட ஹிந்து மஸ்துார் சபா செயலர். இவர், மார்ச் 4ல் கரூர் அருகே டி.வி.எஸ்., மொபட்டில் சென்றபோது, லாரி மோதி தலையில் படுகாயம் அடைந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தராஜ், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
அன்றைய இரவு, மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஆனந்தராஜ் உடலை தகனம் செய்ய, சொந்த ஊரான காளிபாளையத்துக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
தகன ஏற்பாடுகள் நடந்தபோது, அந்த உடல் ஆனந்தராஜுடையது இல்லை என தெரிந்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மதுரை அரசு மருத்துவமனைக்கும், விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட கரூர் தான்தோன்றிமலை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனை சவக்கிடங்கு ஊழியர்கள் விசாரித்த போது, சாலை விபத்தில் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த, விருதுநகரைச் சேர்ந்த தேவேந்திரன், 58, என்பவரது உடலை மாற்றி அனுப்பியது தெரிந்தது.
தேவேந்திரன் உடலை, ஆனந்தராஜ் உறவினர்கள் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதேபோல், விருதுநகருக்கு அனுப்பப்பட்ட ஆனந்தராஜின் உடல், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஒருவழியாக, மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஆனந்தராஜ் உடலும், தேவேந்திரன் உடலும், அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், 'பிணவறையில் பிரேத பரிசோதனை செய்வதற்கும், செய்தபின் உடலை ஒப்படைக்கும் வரை போலீசார் தான் கண்காணிக்க வேண்டும்.
'பிரேத பரிசோதனை செய்வது மட்டுமே மருத்துவமனையின் வேலை. உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது முகத்தைப் பார்த்து அடையாளத்தை உறுதி செய்ய, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இது போன்ற சங்கடங்கள் நேராது' என்றனர்.
