ADDED : மே 09, 2024 06:28 AM
அரவக்குறிச்சி : க.பரமத்தி அருகே, மறவாபாளையத்தில் காவிரி ஆற்றில் இருந்து க.பரமத்தி, சின்னதாராபுரம், ராஜபுரம், அரவக்குறிச்சி வழியாக பெரிய குழாய்கள் மூலம் காவிரி நீர் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
அரவக்குறிச்சியில் சம்ப் என்னும் சேமிப்பு மையம் அமைக்கப்பட்டு, காவிரி நீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சம்ப் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் ஓடி வீணாகிறது. மூன்று மாதங்களுக்கும் மேலாக, 10க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஓடி வீணாகிறது. கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, சேமிக்க வேண்டிய இந்த தருணத்தில், சாலையில் குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.பள்ளப்பட்டி, அரவக்குறிச்சியில் இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தெரிவித்தும், குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, காவிரி குடிநீர் வீணாவதை உடனடியாக தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.