ADDED : ஜூலை 15, 2026 05:47 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் கிராம பஞ்.,களுக்கு காவிரியாற்றில், வாங்கல், கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையங்கள் மூலம் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பின், குழாய் மூலம் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. சில கிராம பஞ்.,களுக்கு அமராவதி ஆற்றில் இருந்தும், குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 'சப்ளை' செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களில் மட்டும், தண்ணீர் சாலையில் செல்வதால், குழாய் உடைப்பை அரசு துறை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.
நேற்று, கரூர்-வாங்கல் சாலை காமராஜ் தினசரி மார்க்கெட் பகுதியில், குழாய் உடைப்பால், தண்ணீர் பலமணி நேரம் வீணாக சாலையில் ஆறுபோல் ஓடியது. மேலும், கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அங்கு, பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க வசதியாக, குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும், குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாக்கடையில் செல்கிறது.
