ADDED : பிப் 23, 2024 02:40 AM
கரூர்:'இன்று சிறு, குழு தொழில் கடன் திட்டங்களுக்கான முகாம் நடக்கிறது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மானியத்துடன் இணைந்த கடன் திட்டங்களுக்கான முகாம் இன்று நடக்கிறது.
இங்கு, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில், புதிய உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் அமைப்பதற்கு வங்கிகளுடன் இணைந்து மானியத்துடன், 5 கோடி ரூபாய் வரை வங்கி கடனுதவி வழங்கப்படும். மேலும், 25 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு, 15 லட்சம் ரூபாய் வரை கடனுதவி, 25 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.