/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓட்டுப்பதிவிற்கு பின் கட்டுப்பாடுகளை விலக்க வணிகர் சங்கம் வேண்டுகோள்
/
ஓட்டுப்பதிவிற்கு பின் கட்டுப்பாடுகளை விலக்க வணிகர் சங்கம் வேண்டுகோள்
ஓட்டுப்பதிவிற்கு பின் கட்டுப்பாடுகளை விலக்க வணிகர் சங்கம் வேண்டுகோள்
ஓட்டுப்பதிவிற்கு பின் கட்டுப்பாடுகளை விலக்க வணிகர் சங்கம் வேண்டுகோள்
ADDED : ஏப் 09, 2024 07:37 AM
நாமக்கல் : 'பணம் எடுத்துச்செல்வதற்கான கட்டுப்பாடுகளை, ஏப்., 19ல், தேர்தல் கமிஷன் விலக்கிக்கொள்ள வேண்டும். மறுத்தால், வணிகர்கள் தேர்தலை புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுதும், கடந்த மார்ச், 16ல் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில், வரும், 19ல், ஓட்டுப்பதிவுக்கு பின்பும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், பணம் கொண்டுச்செல்ல விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஜூன், 4 வரை தொடரும் என்றும், தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இது வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், பொதுமக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் அனைத்து வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்படுவர். தேர்தல் விதிமுறைப்படி, ஒருவர் கொண்டுச்செல்ல அனுமதிக்கப்பட்ட ரொக்கம், 50,000 ரூபாயை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என, ஏற்கனவே வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு தேர்தல் கமிஷன் செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில், கடந்த 2ல், வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில தேர்தல் கமிஷனரை நேரில் சந்தித்து, 'வரும், 19ல் ஓட்டுப்பதிவிற்கு பின், பணம் கொண்டுசெல்லும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளவேண்டும்' என கோரிக்கை மனு அளித்தார். தற்போது, அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின், ஜூன், 4ல், ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெறும் வரையில், இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், வணிகர்கள் மேலும், கடும் அவதிக்குள்ளாவார்கள். வரும், 19க்கு பின், இந்த கட்டுப்பாடுகளை விலக்கிகொள்ள தேர்தல் கமிஷன் மறுத்தால், இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என வணிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, விரைவில், பேரமைப்பின் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

