ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
ஓட்டு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
ADDED : மே 01, 2026 05:42 AM
கரூர்:
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இது குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமார் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி மே, 4ல் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் உள்ள, ஓட்டு எண்ணும் மையத்தில் நடக்கிறது. ஓட்டு எண்ணும் மையத்தில், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில், 903 மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நாளில் தடையில்லா மின்சாரம், கழிப்பறை, குடிநீர், போதிய அளவிலான அவசர கால மருத்துவ சிகிச்சை, தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒ.ஆர்.எஸ்., கரைசல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டு எண்ணும் அறை மற்றும் மேஜைகளை கண்காணிக்க, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கான அறைகளுக்கு வேட்பாளர்களின் முகவர்கள், அலுவலர்கள் செல்வதற்காக தனித்தனி வழித்தடங்கள் அமைக்கபட்டு, போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தொகுதி வாரியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் சுற்றுகள் வாரியாக எண்ணப்பட்டு, உடனடியாக இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
