/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
த.வெ.க., மாவட்ட செயலாளரை விசாரிக்க புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி
/
த.வெ.க., மாவட்ட செயலாளரை விசாரிக்க புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி
த.வெ.க., மாவட்ட செயலாளரை விசாரிக்க புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி
த.வெ.க., மாவட்ட செயலாளரை விசாரிக்க புலனாய்வு குழுவுக்கு நீதிமன்றம் அனுமதி
ADDED : அக் 10, 2025 01:06 AM
கரூர், த.வெ.க., பிரசார கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, அக்கட்சி மாவட்ட செயலர் மதியழகனை, இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, கரூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ல் நடந்த த.வெ.க., பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கொடுத்த புகார்படி, த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், இணை செயலர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் உள்பட பலர் மீது, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த, 29ல், மேற்கு மாவட்ட செயலர் மதியழகனை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக, த.வெ.க., கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜையும் போலீசார் கைது செய்தனர். கடந்த, 30ல் இரண்டு பேரும், கரூர் ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதியழகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூர் ஜே.எம்.,1 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதற்காக நீதிமன்றத்தில் மதியழகனை, நேற்று நேரில் ஆஜர்படுத்தினர். இந்த விசாரணையில், போலீஸ் தரப்பில் ஐந்து நாட்கள் விசாரிப்பதற்காக மனு தாக்கல் செய்தனர். அப்போது மதியழகன் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி பரத்குமார், 2 நாட்கள் போலீஸ் காவலில் மதியழகனை விசாரிக்க, அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
பின் நீதிமன்ற வளாகத்தில், மதியழகன் தரப்பு வக்கீல்கள் அரசு, வெற்றிசெல்வன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், 5 நாள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்தனர். போலீஸ் ஸ்டேஷனில், ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு விட்டது என்று எங்கள் தரப்பில் கூறினோம். அதற்கு அவர்கள், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு விசாரணை மாறி இருப்பதால், மதியழகனிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரினர். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இரண்டு நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மதியழகன், தினசரி எடுத்து கொள்ளப்படும் மருந்துகளுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும். போலீஸ் விசாரணையின் போது, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். வக்கீல்கள், உறவினர்கள் சந்திப்பதில் எந்த தடையும் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.