/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மல்லிகை பூக்கள் பயிரிடுவதில் குளித்தலை விவசாயிகள் ஆர்வம்
/
மல்லிகை பூக்கள் பயிரிடுவதில் குளித்தலை விவசாயிகள் ஆர்வம்
மல்லிகை பூக்கள் பயிரிடுவதில் குளித்தலை விவசாயிகள் ஆர்வம்
மல்லிகை பூக்கள் பயிரிடுவதில் குளித்தலை விவசாயிகள் ஆர்வம்
ADDED : பிப் 22, 2024 07:28 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, தோகைமலை யூனியன் பகுதிகளில் மல்லிகை பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குளித்தலை அருகே நெய்தலுார், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி, ஆர்சம்பட்டி, தளிஞ்சி, ஆலத்துார், பாதிரிபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். தோகைமலை பகுதியில் பல ஆண்டுகளாக, பருவமழை சரியாக பெய்யாத நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
இதனால், வாரத்திற்கு ஒருமுறை மல்லிகை செடிக்கு தண்ணீர் விட்டால் போதும் என்பதாலும், மாசி முதல் கார்த்திகை வரை, 10 மாதங்களாக சாகுபடியில் நல்ல மகசூல் கிடைப்பதாலும், மல்லிகை செடியை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கினர். அறுவடை செய்யப்படும் மல்லிகை சீசன் இல்லாத போது ஒரு கிலோ, 100 ரூபாய்க்கும், சீசன் நேரத்தில் கிலோ, 3,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மல்லிகை செடிகளை நல்ல முறையில் பராமரித்து சாகுபடி செய்து வருகின்றனர். மார்கழி, தை மாதங்களில் பனி பெய்வதால், பூ மகசசூல் வெகுவாக குறைந்துவிடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆகவே, கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மல்லிகை செடிகளின் மேல்பகுதியில் முதிர்ச்சியடைந்த தலைகளை அகற்றிவிட்டு, அந்த செடிகளை கட்டி வைத்து விடுகின்றனர். இதை மீண்டும் தை மாத இறுதியில், மல்லிகை செடியில் கட்டிய கட்டை நீக்கி, உரம் வைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த இடைப்பட்ட நாட்களில், சந்தைகளில் மல்லிகை போன்று நிறம் உள்ள மணமில்லாத காக்கரட்டான் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. பெண்களை வெகுவாக கவரும் மல்லிகை பூ மீண்டும் வருகிறது. தற்போது மாசி மாத தொடக்கத்தில் பூக்க தொடங்கிவிட்டது. இதனால் பாதுகாக்கப்பட்டு வந்த மல்லிகை செடிகளில், தற்போது பூக்கள் பூக்க தொடங்கி உள்ளது. அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள், தங்கள் வயல்களில் உள்ள மல்லிகை பூக்களை பறித்து சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.