/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தர்பூசணியில் கலப்படம் செய்வதாக வதந்தி நம்ப வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
/
தர்பூசணியில் கலப்படம் செய்வதாக வதந்தி நம்ப வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
தர்பூசணியில் கலப்படம் செய்வதாக வதந்தி நம்ப வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
தர்பூசணியில் கலப்படம் செய்வதாக வதந்தி நம்ப வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
ADDED : ஏப் 29, 2025 01:44 AM
கரூர்:
தர்பூசணியில், கலப்படம் செய்யப்படுவதாக பரப்பிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர், 70 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. தர்பூசணி டிச., ஜன., பிப்., மாதங்களில் விதைக்கப்பட்டு, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வருகிறது. வெயில் காலங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில், சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சில வாரங்களுக்கு முன், தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து, வேளாண்
உற்பத்தி ஆணையர் மற்றும் தோட்டக்கலை இயக்குனர் ஆகியோர், கள ஆய்வு மேற்கொண்டு அதன் உண்மை நிலையை தெரிவிக்க உத்தரவிட்டனர். இதன்படி, தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வரும் இடங்களில், தோட்டக்கலை துணை இயக்குனர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில், தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால், கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. மேலும், நம் உடலின் நீர்ச்சத்தின்மையை போக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணுாட்ட சத்துக்களும் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும், இயற்கையாகவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால், சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மஞ்சள் நிற தர்பூசணி பழத்திற்கு பீட்டா கரோட்டீன் எனப்படும் சுரப்பி காரணமாகும். இத்தகைய சத்துக்கள் நிறைந்த தர்பூசணியில், கலப்படம் செய்யப்படுவதாக பரப்பப்படும் தவறான வதந்தியை நம்ப வேண்டாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

