ADDED : மார் 04, 2024 07:32 AM
கரூர் : ''டெல்டா மாவட்டங்களில், 'சிறப்பு துார்வாரும்' திட்டத்தில், கரூர் மாவட்டத்திற்கு, 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பழனிசாமி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை மூலம் சிறப்பு துார்வாரும் திட்டப்பணிகள் வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டத்தில், டெல்டா மாவட்டங்களில், 'சிறப்பு துார்வாரும்' திட்டம் சார்பில், 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆற்று பாதுகாப்பு கோட்டம் மூலம், 14 -பணிகள், 53.15 கி.மீ., துாரத்திற்கு, 2.76 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,
அரியாறு வடிநில கோட்டம் மூலம், 5 பணிகள், 32 கிலோ மீட்டர் துாரத்திற்கு, 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் துார்வாரும் பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தென்கரை கால்வாய், 3.80 கி.மீ., துார்வாரும் பணி, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குளித்தலை காட்டுவாரி, 3.40 கி.மீ., துார்வாரும் பணி, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிவாயம் வாரி, 2.45 கி.மீ., துார்வாரும் பணி, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் நடக்கிறது.
இப்பணிகள் அனைத்தையும் செயல்படுத்துவதன் மூலம், மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட பாசன தண்ணீர், 'அ' பிரிவு வாய்க்கால்களான தென்கரை வாய்க்கால், நங்கம்கிளை வாய்க்கால்கள் மூலம் கரூர் மாவட்டத்தில், 8,000 ஏக்கர் விளைநிலங்களுக்கு தடையின்றி கடைமடை வரை சென்றடைவது உறுதி செய்யப்படும்.
வடிகால் வாரிகளை துார்வாருவதன் மூலம், மழைக்காலங்களில் வெள்ள நீர் விளை நிலங்களில் சென்று பாதிப்பு ஏற்படுத்துவது தடுக்கப்பட்டு வெள்ளத்தால் பயிர் சேதம் மற்றும் பொருள்சேதம் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும். இப்பணிகள் அனைத்தும் வரும், மே,- 20க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் தங்கவேல், பொதுப்பணித்துறை நீர்வளம் செயற்பொறியாளர் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் கோபி
கிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், பத்மாதேவி உள்பட பலர்
பங்கேற்றனர்.

