/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போதை மாத்திரை விற்பனை; பெண் உள்பட 3 பேர் கைது
/
போதை மாத்திரை விற்பனை; பெண் உள்பட 3 பேர் கைது
ADDED : அக் 18, 2024 07:08 AM
கரூர்: கரூரில், இளைஞர்களுக்கு சட்ட விரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த, ஒரு பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
போதை மாத்திரை, ஊசிகளை கரூர் பகுதியில் மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போதை கும்பலை கண்டுபிடிக்க, டவுன் போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நடத்திய சோதனையில், ஆண்டாங்கோவிலை சேர்ந்த எடில் ரெமிங்டன், 24, வெங்கமேட்டை சேர்ந்த மலர் (எ) மலர்கொடி, 43, கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த கிஷோர்குமார், 27, ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்களிடம், டேப்பென்டடோல் ெஹசிஎல் என்ற வலி நிவாரணி மாத்திரை இருந்துள்ளது. இந்த மாத்திரைகளை, போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு, சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரிய வந்தது. ஒரு மாத்திரையை, 200 முதல், 500 ரூபாய் வரை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து, 2,400 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து எடில் ரெமிங்டன், மலர்கொடி ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போதை மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால், கிஷோர்குமாருக்கு ஏற்பட்ட சிறுநீரக கோளாறு காரணமாக, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.