/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
/
உற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
உற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
உற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 04, 2024 11:12 AM
கரூர்: கரூர் சுற்று வட்டார பகுதிகளில், கோரை புல் உற்பத்தி அதிகரித்துள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. உரிய விலை கிடைக்க, அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் வாங்கல், என்.புதுார், பிச்சம்பாளையம், கடம்பங்குறிச்சி, தளவாய் பாளையம், தோட்டக்குறிச்சி, நெரூர், மரவாப்பாளையம், புதுப்பாளையம், திருமாகூடலுார், அச்சமாபுரம், சோமூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோரை பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரை புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோரை புல் மூலம், பொதுமக்கள் உறங்க பயன்படுத்தும் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், கான்கிரீட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, கோரை புல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த, 10 நாட்களாக கோரை புல் அறுவடை நடந்து வருகிறது. ஆனால், உற்பத்தி அதிகரிப்பால், போதிய விலை கிடைக்கவில்லை.
இது குறித்து, கரூர் நெரூரை சேர்ந்த கோரை புல் விவசாயிகள் கூறியதாவது: 16 இன்ச் கொண்ட ஆறு கோரை புல் கட்டுகள், 1,500 ரூபாய் வரை, ஆறு மாதங்களுக்கு முன்பு விலை போனது. தற்போது, 1,200 ரூபாய்தான் கிடைக்கிறது. இடைத்தரகர்கள் மூலம்தான், கோரை புல்லை விவசாயிகள் விற்க முடிகிறது. நேரடியாக விற்பனை செய்ய வழியில்லை. எனவே, அறுவடை காலங்களில் நெல்லுக்கு கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது போல, கோரை புல்லுக்கும் கொள்முதல் நிலையத்தை அரசு திறக்க வேண்டும். அப்போது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு கூறினர்.