/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விடிய, விடிய மழை: குளிர்ந்த காற்றால் மக்கள் அவதி
/
விடிய, விடிய மழை: குளிர்ந்த காற்றால் மக்கள் அவதி
ADDED : நவ 25, 2025 01:16 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.
சென்யார் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த, மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்துக்கு கனமழை பாதிப்பு குறித்த, அறிவிப்பு இல்லை என்ற நிலையிலும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை முதல் கரூர் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. பிறகு, சற்று ஓய்ந்திருந்த மழை மதியம், 1:00 மணி முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது. மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசியதால், அவதிப்பட்ட பொதுமக்கள் குடை, ஸ்வெட்டர், ரெயின் கோர்ட் சகிதம் கரூரில் உலா வந்தனர்.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் கரூர், 22, அரவக்குறிச்சி, 22, அணைப்பாளையம், 19, க.பரமத்தி, 32.20, குளித்தலை, 9, தோகைமலை, 53.80, கிருஷ்ணராயபுரம், 16.50, மாயனுார், 20, பஞ்சப்பட்டி, 12.40, கடவூர், 12, பாலவிடுதி, 10, மயிலம்பட்டி, 12 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 20.8 மி.மீ., மழை பதிவானது.
* அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கன
மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கோவிலுார், ஆண்டிபட்டிகோட்டை, ஈசநத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளன. இதனால் வாகனங்கள் நின்று போகும் நிலை உருவாகி, பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது.
இது குறித்து அரவக்
குறிச்சி மாரியம்மன் கோவில் வடக்கு புறமுள்ள மக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக வடிகால் அமைப்புகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. சிறிதளவு மழை பெய்தால்கூட சாலைகள் நீரில் மூழ்குகின்றன.
மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து, நீர் வடிந்து செல்ல தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
மழை மேலும் தொடரும் என்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என, அரவக்குறிச்சி பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,857 கன அடி தண்ணீர் வந்தது.
காவிரியாற்றில், சம்பா சாகுபடி பணிக்காக வினாடிக்கு, 1,737 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 62 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.97 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

