ADDED : ஏப் 04, 2026 04:45 AM
கரூர், சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 19 நாட்களே உள்ள நிலையில், கரூரில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு வரும், 23ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு கடந்த, 30ல் துவங்கியது. கடந்த 15ல் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன், நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் நான்கு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வாகனங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதை தவிர, மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று கரூர் அருகே கொளந்தாகவுண்டனுாரில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அதில் பணம், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என, சோதனை செய்யப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம், குளித்தலை மற்றும் தோகைமலை பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நான்க சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ், பால்வண்டி, இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட, ரூ.50 ஆயிரம் ரொக்கத்துக்கு கூடுதலாக பணம் கொண்டு வரப்படுகிறதா அல்லது பரிசு பொருட்கள் கொண்டு வரப்படுகிறா என ஆய்வு செய்கின்றனர்.
குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் சின்னரெட்டிபட்டி மற்றும் திருச்சி-தோகைமலை நெடுஞ்சாலையில் ஆர்.டி.மலை பஞ்., அழகாபுரி பிரிவுரோடு அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்டஎல்லை செக்போஸ்டில் தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று பறக்கும் படை அதிகாரிகளுடன் குளித்தலை சப்- கலெக்டர் சுவாதிஸ்ரீ வாகன சோதனையில் ஈடுபட்டார்.
இதேபோல், கிருஷ்ணராயபுரம் மற்றும் மாயனுார் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், மாயனுார் இன்ஸ்பெக்டர் முத்தையன், எஸ்.ஐ., மற்றும் காவலர்கள் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
