/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்க கூட்டம்
/
கரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்க கூட்டம்
ADDED : மார் 18, 2024 03:34 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கும் வகையிலான கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது:
மார்ச் 20 முதல் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வரும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலிருந்து, 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் போது
வேட்பாளர்கள் தங்களுடன் நான்கு பேரை மட்டுமே உடன் அழைத்து வர வேண்டும்.
வேட்பாளர் தங்களது வேட்புமனுவினை படிவம் 2-ல் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்களை மட்டுமே தாக்கல் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒரு முன் மொழிபவர் போதுமானது. மற்ற வேட்பாளர்களுக்கு, 10 பேர் முன்மொழியப் பட வேண்டும். முன்மொழிபவரின் பெயர் அந்தந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். வேட்பு மனுத்தாக்கலுக்கான கட்டணம், 25,000 ரூபாய், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வேட்பு மனுத்தாக்கலுக்கான கட்டணம், 12,500 ரூபாய் - செலுத்த வேண்டும்.
தேர்தல் செலவினங்களை குறிப்பதற்கான குறிப்பேடு பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், வேட்பாளர் தேர்தல் செலவு கணக்குகளை கவனிப்பதற்காக கூடுதலாக ஒரு முகவரை நியமித்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எஸ்.பி. பிரபாகர், டி.ஆர்.ஓ., கண்ணன், சப் கலெக்டர் சைபுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

