/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சகதியாக பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
சகதியாக பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
சகதியாக பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
சகதியாக பாப்புலர் முதலியார் வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : மே 07, 2024 07:23 AM
கரூர் : சேறும், சகதியுமாக மாறிய பாப்புலர் முதலியார் வாய்க்காலை துார்வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் புகழூர் ராஜவாய்க்காலில் இருந்து பிரிந்து செம்படாபாளையம், தளவாப்பாளையம், மேட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி என, 10 கி.மீ., தொலைவில் வாங்கல் வாய்க்காலுடன் கலக்கிறது பாப்புலர் முதலியார் வாய்க்கால். இந்த வாய்க்கால் வாயிலாக, 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்காலை பயன்படுத்தி விவசாயிகள் கோரை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது வாய்க்காலில் தண்ணீர் சென்றுகொண்டே இருக்கும்.
தற்போது, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததால் புகழூர் ராஜவாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை. தற்போது, வாய்க்காலில், 4 அடி ஆழத்திற்கு சேறும், சகதியும் நிறைந்து காணப்படுவதால் இந்த வாய்க்காலை துார்வார வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு மாநில அரசின் நீர்வளத்துறை மூலம் பாப்புலர் முதலியார் வாய்க்கால், 8 கி.மீ., தொலைவுக்கு, 15 லட்சம் ரூபாயில் துார்வாரப்பட்டது. துார்வாரிய சில நாட்களிலேயே ஆற்றில் தண்ணீர் வந்ததால், வாய்க்காலுக்கும் தண்ணீர் வந்தது. வாய்க்கால் துார்வாரப்பட்டதால் தண்ணீர் தங்கு தடையின்றி கடைமடை பகுதிக்கு சென்றது. புகழூர், செம்படாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் வாய்க்காலில் தற்போது கலந்து வருவதால் வாய்க்கால் மாசடைந்து, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மேலும் வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறியுள்ளது. எனவே, இந்த வாய்க்காலை துார்வாருவதுடன், கழிவு நீரை வாய்க்காலில் திறந்து விடுவோர் மீது புகழூர் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர்.